எங்கே செல்கிறோம்?

9 Sep

காரைக்காலில் அண்மையில் நடந்துள்ள நிகழ்வு, கல்நெஞ்சுள்ளவர்களையும் கரைய வைத்து விடும். தனது மகளுடன் படிக்கும் சக மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து அவரது உயிரை மாய்த்திருக்கிறார், ஒரு தாய். நமது கல்வி முறையும் சமூக உறவுகளும் மிக மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை இந்நிகழ்வு கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

                புதுவை ஒன்றியப் பகுதியான காரைக்காலில் செயல்படும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் பாலமணிகண்டன், படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகைக்காகச் சென்ற மாணவருக்கு இடைவேளையில் வீட்டிலிருந்து வந்ததாகக் கூறி குளிர்பானம் தரப்பட்டுள்ளது. அதனை அருந்திய சில நிமிடங்களில் அந்த மாணவருக்கு வாந்தியும் மயக்கமும் நேரிட்டுள்ளன.

                அதையடுத்து அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செப். 4ஆம் தேதி அவர் மரணமடைந்தார். காவல்துறை  விசாரணையில், அந்த மாணவருக்கு அளிக்கப்பட்ட குளிர்பானத்தில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. அதனை தாங்கள் அனுப்பவில்லை என்று அவரது பெற்றோர் கூறிய போதுதான், அதன் பின்னணியில் இருந்த குற்றம் வெளிப்பட்டது.

                பள்ளியின் காவல்காரர் தேவதாஸிடம் விசாரித்தபோது, மாணவர் பாலமணிகண்டனின் உறவினர் என்று கூறி, குளிர்பானத்தை ஒரு பெண் கொடுத்துச் சென்றதாகத் தெரிவித்திருக்கிறார். பள்ளியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிளை ஆய்வு செய்தபோது, அவர் அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா என்பது கண்டறியப்பட்டது.

                அந்தப் பெண்ணிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. தனது மகளை விட அவளுடன் படிக்கும் மாணவர் பாலமணிகண்டன் நன்றாகப் படித்ததும், அதிக மதிப்பெண் பெற்றதும், அந்தப் பெண்ணின் மனதில் பொறாமைத்தீயை வளர்த்திருக்கின்றன. தனது மகளை வகுப்பில் முதலிடம் பெறச் செய்வதற்காக, அவளது சக மாணவரான பாலமணிகண்டனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்ததாக அவர் கூறியிருக்கிறார்.

                தனது மகளுடன் படிக்கும் சக மாணவனை மகன் போலக் கருத வேண்டிய அந்தத் தாய், போட்டி பொறாமை காரணமாக, காலத்தால் அழிக்க முடியாத களங்கத்தை நிகழ்த்தி இருக்கிறார். அதற்கு அறியாப் பாலகனான ஒரு மாணவர் பலியாகி இருக்கிறார்.

                 இந்த நிகழ்வு, நமது சமூக உறவுகள் சீர்குலைந்திருப்பதன் அடையாளம். “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்ற பழமொழி நிலவும் தமிழ் மண்ணில், அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு விஷம் கொடுக்க அந்தத் தாய்க்கு எப்படி மனம் வந்தது?

                இந்த நிகழ்வால் அந்த மாணவரின் குடும்பமும், அந்த மாணவியின் குடும்பமும் தற்போது நிலைகுலைந்து போயிருக்கின்றன. அதைவிட அதிகமாகக் குலைந்து போயிருக்கிறது, சமூக உறவுகளிடையிலான நல்லிணக்கம். இதை நாம் எவ்வாறு சரி செய்யப் போகிறோம்?

                அடுத்ததாக, நமது கல்விமுறையின் போதாமை இந்நிகழ்வில் அம்பலமாகி இருக்கிறது. “மனிதனுக்குள் உள்ள பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதே கல்வி’ என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார். ஆனால் நமது கல்விமுறை, மாணவர்களை மதிப்பெண் குவிக்கும் இயந்திரங்களாக மாற்றிவிட்டது. அதனால், மாணவர்களிடையிலான போட்டி ஆரோக்கியமானதாக இல்லாது, வெறுப்பை விதைப்பதாக மாறிவிட்டது.

                அந்த மாணவருக்கு விஷம் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்த மாணவியின் தாய், அதனால் மாணவர் இறந்துவிடக்கூடும் என்பதைக் கூட அறியாமல் இருந்திருக்கிறார் என்றால், அவர் கற்ற கல்வியாலும் பயனில்லை. அதைவிட, நல்ல குணத்தைத் தராத கல்வியால் எந்தப் பலனும் இல்லை.

                தற்கால பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கடினமான எதிர்கால இலக்குகளை நிர்ணயித்து கடிவாளமிட்ட குதிரைகள் போலவே வளர்க்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்பியல்பு உண்டு. அதைக் கண்டறிந்து வளர்க்காமல், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களை நகலெடுக்கும் முயற்சியில் அவர்கள் இறங்குகிறார்கள்.

                தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட எந்தப் பெற்றோருக்கும் உரிமை உண்டு. அதே சமயம், பெற்றோரின் அதிகப்படியான கனவுகளையும் நிறைவேறாத ஆசைகளையும் பொதியாகச் சுமக்கும் கழுதைகளல்ல குழந்தைகள்.

                தனது குழந்தை எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று முதிரா வயதிலேயே தீர்மானிப்பது, பிற குழந்தைகளுடன் தேவையற்ற ஒப்பீடுகளைச் செய்வது, விளையாட்டுப் பருவத்தில் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் புத்தகப்புழுக்களாக அவர்களை மாற்றுவது ஆகியவற்றில் தான் இன்றைய பெற்றோர் அதீத கவனம் கொடுக்கின்றனர்  என்று தெரிகிறது.

                தங்கள் விருப்பத்துக்கு மாறாக குழந்தைகள் படிப்பில் பின்தங்கும்போது பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களில் சிலர்தான், இங்கு குறிப்பிடப்பட்ட மாணவியின் தாய் போல அசுர குணத்தை வெளிப்படுத்தி விடுகின்றனர். தனது தாயின் ஈனச்செயலால் ஏற்பட்ட கறையை அந்த மாணவி வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டியிருக்கும். இது மரணத்தைவிடக் கொடுமையானது.

                 காரைக்கால் நிகழ்வு, ஆழப் பெருங்கடலில் தென்படும் பனிப்பாறையின் முகடு மட்டுமே. அருகில் நெருங்கும் வரை அதன் ஆபத்து புலப்படாது. இந்த உளச் சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது கல்வியாளர்கள், சமூகவியலாளர்களின் கடமை.

  • தினமணி (09.09.2022)

.

Leave a comment