பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!

29 Oct

-பி.எஸ்.எம்.ராவ்

அரசுக் கருவூலத்துக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பெரும் இழப்பு ஏற்படுத்துவதாக அரசு சார்ந்த நிபுணர்கள் பலர் கூறுவது அவர்களைப் பொருத்த வரை சரியே. அதேசமயம், அத்திட்டம் தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. அத்திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டம், முற்றிலும் தவறானது. இத்திட்டம் ஊழியர்களிடம் ஓய்வூதியத்துக்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வுக்குப் பிந்தைய ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அதிக செலவாவதாகக் கூறி புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசுக்குப் பரிந்துரை செய்த நிபுணர்கள் அறியாதது, அரசு தனது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சமூகப் பாதுகாப்பை பின்னுக்குத் தள்ளிவிட முடியாது என்பதே.

இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டமும் புதியதல்ல. இத்திட்டம் 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, 2004 ஏப்ரல் 1இல் தொடங்கப்பட்டதுதான். 2003ஆண்டு கணக்குப்படி ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள், அரசு ஊழியர் ஓய்வூதியமாக ரூ. 65,000 கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொகை ஆண்டுதோறும் 20 சதவீதம் உயரும் என்றும் அப்போது கூறப்பட்டது. இதனைக் குறைப்பதன் மூலமாக அரசின் செலவினம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கு அத்தொகையைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டது.

முதலில் மத்திய அரசு இத்திட்டத்தை தனது புதிய ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு பிற மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக இத்திட்டத்தைப் பின்தொடர்ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டும் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்ந்தது.

இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்களிடையே இயல்பாகவே எதிர்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் போராடும்போது காணப்படும் வேகம் ஆரம்பக்காலத்தில் அவர்களிடம் காணப்படவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் இதன் தீவிரம் ஊழியர்களால் முழுமையாக உணரப்படவில்லை. அரசின் விரும்பத்தகாத கொள்கை முடிவு மாற்றங்களுக்கு எதிரான எந்த ஒரு போராட்டமும், அதன் இறுதி விளைவு ஏற்படுத்தும் தாக்கத்தால்தான் வீரியம் பெறுகிறது. ஏனெனில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்படும்போது அதன் விளைவுகள் முழுமையாகத் தெரிவதில்லை.

உதாரணமாக பெட்ரோல் விலை உயர்வையே எடுத்துக் கொள்வோம். பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோலியத் தயாரிப்பு நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று இருபதாண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டபோது அதன் தாக்கத்தை மக்கள் முழுமையாக உணரவில்லை. ஏனெனில்  அப்போது பெட்ரோல் விலை உயர்வு பெரிய அளவில் இல்லை. ஆனால், இன்று பெட்ரோல் , டீசல் விலை கடுமையாக உயரும்போது அதன் தாக்கத்தை, மக்கள் கொள்கை மாற்றத்தின் சுமையாக உணர்கிறார்கள்.

அதுபோலவே புதிய ஓய்வூதியத் திட்டமும் உடனடியாக ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜன.1ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாகப் புலப்படும்.

தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டுவருமாறு கோரி ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஏற்கெனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டனர். தில்லி, பஞ்சாப் மாநிலங்களிலும் இதே முடிவை மேற்கொள்ளப் போவதாக மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலின்போது ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரி, அம்மாநில அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். தமிழகத்திலும் இன்னும் பல மாநிலங்களிலும் இதே கோரிக்கைக்காக அரசு ஊழியர்கள் போராடி  வருகின்றனர்.

எனவே தற்போது நடைமுறையிலுள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. அரசு ஊழியர்களின் நிர்பந்தத்துக்கு அஞ்சி, பொருளாதாரச் சுமை குறித்த நிபுணர்களின் ஆலோசனையைக் கருத்தில் கொள்ளாமல்,  பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் அமலாகி வருகிறது. இது  நாடு முழுவதிலும் எத்தகைய மாற்றத்தை நிகழ்த்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்டி, ஒவ்வொரு அரசு ஊழியரிடமிருந்தும் மாதந்தோறும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் ஓய்வூதிய நிதிக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அரசும் தனது பங்களிப்பாக 14 சதவீதத்தை (முன்னர் இது 10 சதவீதமாக இருந்தது) அளிக்கிறது. இத்தொகை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு வட்டி ஈட்டப்படுகிறது. அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகையை வட்டியுடன் பெறலாம். அல்லது, அவர்கள் வருடாந்திரத் தொகையை நிர்ணயித்துக்கொண்டு குறிப்பிட்ட பெருந்தொகையை வருடந்தோறும் பெறலாம்.

அதாவது புதிய ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்துக்காக தாங்களே ஊதியத்திலிருந்து பங்களிப்புத் தொகையை அளிக்கிறார்கள். அத்தொகை முதலீடாகும் நிறுவனங்களின் வளர்ச்சியே அத்தொகையின் மதிப்பை நிர்ணயிக்கிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் எந்தப் பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை. அதேசமயம், அவர்கள் கடைசி மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதித் தொகையை ஓய்வூதியமாக அரசு வழங்குகிறது. இதுவே அனைவராலும் ஏற்கப்பட்ட திட்டமாகும்.

சர்வதேசத் தொழிலாளர் (ஐஎல்ஓ) அமைப்பால் 1953இல் நடத்தப்பட்ட 102வது சமூகப் பாதுகாப்பு மாநாடு, ஓய்வு பெறும் ஊழியர்களது கடைசி மாத காப்புறுதி (இன்ஷ்யூர்டு) ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதனை அரசு – தொழில் நிறுவனங்கள் – தொழிலாளர்கள் என முத்தரப்பும் இணைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்றும் ஐஎல்ஓ கூறியது. ஐஎல்ஓ}வின் பரிந்துரை, அரசு ஊழியர்களுக்கானது மட்டுமல்ல,  ஒட்டுமொத்தத் தொழிலாளர்களுக்கும் பொருந்தக் கூடியது. ஆயினும் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை அரசு ஊழியர்களே வகிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புத் துறையில் முறைசார் தொழிலாளர்களின் விகிதம் 7 சதவீதத்துக்கும் குறைவு. அதிலும் பொதுத்துறை (அரசு சார்பு) ஊழியர்களின் விகிதம் 4 சதவீதமாக உள்ளது. எனவே அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மீது தொடுக்கப்படும் தாக்குதலானது ஒட்டுமொத்தமாக தாக்கத்தை ஏற்படுத்தும். 2017-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 34.65 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியர்களும் உள்ளனர். இவர்களில் 2004}க்குப் பிறகு பணியில் சேர்ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவர்களை மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டம் பாதிக்கும்.

ஆனால், அரசு என்பது பிற தனியார் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரண நிறுவனமாக வழிகாட்ட வேண்டும். ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதேசமயம், அரசு தனது சமூகப் பொறுப்புணர்வைத் தட்டிக் கழிக்க முடியாது. “சமமான பணிக்கு சமமான ஊதியம்’ என்ற நிலையை தொழிலாளர்களிடம் நிலைநாட்ட வேண்டிய பொறுப்புள்ள அரசுக்கு, தொழிலாளர்கள் கெüரவமான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்தும் கடமையும் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கவனம் குறைந்துவருவது தெரிகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டின் மக்கள்தொகையில் இவர்களின் பங்கு 1951-இல் 5.5 சதவீதமாக இருந்தது, 2011}இல் 8.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 

நமது நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2021-இல் 13.8 கோடியாக இருந்தது. (2011-இல் இது 10.4 கோடியாக இருந்தது). இது உலக அளவிலான மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் 12.5 சதவீதமாகும். இது 2026-இல் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்பிஎஃப்) மதிப்பிட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) கணிப்புப் படி, 2031-இல் இவர்களின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும். அதுமட்டுமல்ல, வயதாவதால் பிறரைச் சார்ந்திருப்போரின் விகிதம் 1961-இல் 10.9 சதவீதமாக இருந்தது, 2011-இல் 14.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2031-இல் இந்த விகிதம் 201 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலை, முதியோருக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் அரசோ, முதியோர் பாதிக்கப்படும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறைசார்ந்த தொழிலாளர்களுக்கே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிற தொழிலாளர்கள் எவ்வாறு அதனைப் பெற முடியும்? 

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் இருப்போருக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியத் திட்டங்களிலேயே முரண்பாடும் ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. உதாரணமாக, ஐந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ) ஒருவர் முழு ஓய்வூதியம் பெறுகிறார். இதிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உண்டு. ம.பி.யில் ஒருநாள் பணியாற்றிய எம்எல்ஏவும், ஹரியாணாவில் 7 முறை தேர்வான எம்எல்ஏவும் ரூ. 2.38 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறார்கள். தெலங்கானாவில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும், மூன்று முறைக்கு மேல்  எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 75 ஆயிரமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றன. எம்எல்ஏ ஓய்வூதியம் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 30 ஆயிரமாகவும், தமிழகத்தில் ரூ. 40 ஆயிரமாகவும் உள்ளது.

இதனை தொழிலாளர் ஈட்டுறுதி நிதி நிறுவனம் (இபிஎஃப்) வழங்கும் தனியார் நிறுவனத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். லட்சக் கணக்கில் மாத ஊதியம் பெற்ற உயரதிகாரிகள் கூட இத்திட்டத்தில் ரூ. 1,500 மட்டுமே ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள்; அண்மையில் ஓய்வு பெற்றவர்கள் கூடுதலாக ஆயிரம் ரூபாய் பெறக் கூடும். இதற்குக் காரணம், அவர்களது ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையானது ஒட்டுமொத்த ஊதியத்தின்படி கணக்கிடப்படாமல், காப்புறுதி ஊதியத்தின் படி கணக்கிடப்படுவதே.

இபிஎஃப் ஓய்வூதியத் திட்டம் அமலான 1995-இல் காப்புறுதி ஊதியம் ரூ. 6,500 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அண்மையில்தான் இது ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போதைய ஓய்வூதியக் கணக்கீட்டு சூத்திரத்தின்படி,  35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும் அதிகபட்சம் ரூ. 3,250 மட்டுமே ஓய்வூதியமாகப் பெற முடியும்.

இதற்கு முன் இத்தொகை ரூ. 500 ஆகவும் கூட இருந்ததுண்டு. அதுவரை தொழிலாளர்கள் பெற்றுவந்த ஊதியத்தில் 27 சதவீதம் கூடப் பெற இயலாத நிலையில் 83 சதவீத தொழிலாளர்கள் இருப்பதை  அறிந்த மத்திய அரசு இத்தொகையை குறைந்தபட்சம் ரூ. ஆயிரமாக உயர்த்தியது. இதுவும் போதுமானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். சமூகநலத் திட்டமாக, மாநிலங்களில் ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம் கூட இபிஎஃப் ஓய்வூதியத்தைவிட அச்சமயத்தில் அதிகமாக இருந்தது.

உதாரணமாக, தெலங்கானா மாநில அரசு ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்குகிறது. தற்போது ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ. 2,750ஆக  இது அதிகரிக்கப்பட உள்ளது. தில்லி, ஹரியாணா மாநிலங்களிலும் முதியோர் ஓய்வூதியமாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும்,  அரசு, தனியார் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பதையே காட்டுகின்றன. அவர்கள் கடைசியாகப் பெறும் மாத ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியானாதாக இருக்கும். ஆனால் அரசோ, அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திலேயே கை வைத்திருக்கிறது.

அரசு இதற்கு முன் ஊழியர்களுக்கு அளித்துவந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாலும் குறைக்காமலேனும் இருக்கலாம். பணி ஓய்வு பெறும் தொழிலாளர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் தரம் தாழ்ந்த திட்டங்களை அரசுகள் கொண்டுவரக் கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

  • தினமணி (29.10.2022)

.

Leave a comment