எனது ஆசிரியரின் பாராட்டு

6 Nov

தினமணி ஆசிரியரும் எனது அன்றாட இதழியல் பணிகளில் வழிகாட்டியுமான திரு. கி.வைத்தியநாதன் அவர்கள் ‘கலாரசிகன்’ என்னும் பெயரில் எழுதும்  ‘தமிழ்மணி’ பத்தியில், நான் எழுதிய ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் குறித்து  எழுதியுள்ள இதயப்பூர்வமான பாராட்டுரை இது... 

அவரது பெருந்தன்மையும் உயர் மாண்பும் வெளிப்படும் இந்தப் பாராட்டுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? எனது இதழியல் பணிக்கு கிடைத்த பெரும் வெகுமதியாக அவரது ஆசியை நான் உணர்கிறேன். எனது ஆசிரியருக்கு நன்றி! 

இந்த வாரம் – கலாரசிகன்

‘தினமணி’ நாளிதழின் இணைப்பாக வெளிவந்து கொண்டிருந்த  ‘இளைஞர்மணி’யில், அப்போது முதன்மை உதவி ஆசிரியராக இருந்த வ.மு.முரளியின் அக்கினிக் குஞ்சுகள் தொடர் வெளிவரும் போதே, அந்த இணைப்பில் எதைப் படிக்கிறேனோ இல்லையோ, அந்தக் கட்டுரைகள் அச்சு வாகனம் ஏறியதும் படித்துவிடுவது என் வழக்கம். ஒன்று, இரண்டு என்று தொடங்கித் தொடர்ந்து 120 வாரங்கள், அதாவது ஏறத்தாழ இரண்டாண்டுகள் அந்தக் கட்டுரைத் தொடர் வெளியானது.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்திடமிருந்து ஒருநாள் கடிதம் ஒன்று வந்தது.  ‘தினமணி’ இணைப்பில்  ‘அக்கினிக் குஞ்சுகள்’ என்ற தலைப்பில் வெளிவரும் இந்திய விஞ்ஞானிகளின் வரலாறு குறித்த கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று விரும்பினார்  அவர். அதற்கான அனுமதி கோரித் தான் கடிதம் வந்திருந்தது. அந்தத் தொகுப்பை அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட விழைகிறது எனும்போது அனுமதி மறுப்பது எங்ஙனம்?

ஆரியபட்டர், வராகமிஹிரர், பாஸ்கரர், பிரம்மகுப்தர் என்று தொடங்கிய அந்தத் தொடர், விஞ்ஞான மூதாதையருடன் முடிந்து விடவில்லை. நோபல் விருதாளர்கள், நவீன அறிவியல் மேதைகள், இஸ்ரோ விஞ்ஞானிகள் என்று ஒருவர் விடாமல் பதிவு செய்திருப்பது, தொகுப்பாகப் படிக்கும்போது இப்போது பிரமிப்பு ஏற்படுத்துகிறது. கட்டுரைகளைப் படித்தபோது ஏற்படாத மலைப்பு மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் தொகுப்புகளைப் படித்தபோது எனக்கு ஏற்பட்டது.

கட்டுரை எழுதும்போது முதன்மை உதவி ஆசிரியராக இருந்த வ.மு.முரளி, இந்தத் தொகுப்பு வெளிவரும்போது தருமபுரி பதிப்பின் துணை செய்தி ஆசிரியராகி விட்டார். பாமரருக்கும் புரியும் விதத்தில், தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் விரும்பிப் படிக்கும் பாணியில் கட்டுரைகளை எழுதி இருப்பதுதான் அவரது எழுத்தின் சிறப்பு.

என்னுள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது.  ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் வடிவம் பெற அனுமதி கேட்டுக் கடிதம் எழுதிய கவிஞர் சிற்பி பாலசுப்பி ரமணியமும், இளவல் வ.மு.முரளியும் என்னிடம் பலமுறை கேட்டும் கூட அதற்கு அணிந்துரை எழுதிக் கொடுக்காமல் போனது தவறு என்பதைப் புத்தகங்களைப் பார்த்த போது உணர்ந்தேன். தவறுதான், ஒப்புக்கொள்கிறேன். ‘அன்றாட எழுத்துப் பணி’ என்று சமாதானம் கூறித் தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை.

தினமணி தமிழ்மணி (06.11.2022)

###

One Response to “எனது ஆசிரியரின் பாராட்டு”

Trackbacks/Pingbacks

  1. அக்கினிக் குஞ்சுகள்- நூல் விளம்பரம் | வ.மு.முரளி - November 9, 2022

    […] எனது ஆசிரியரின் பாராட்டு […]

    Like

Leave a comment