பாஜகவினருக்கான கையேடு

12 Dec

நாடு முழுவதும் பாஜக வளர்ச்சி கண்டாலும் தமிழகத்தில் சாதிக்க முடியாமல் தடுமாறுகிறது. பிரதமர் மோடியின் செல்வாக்கு உலக அளவில் விரிவடைந்தாலும் தமிழகத்தில் செல்லுபடி ஆகாமல் இருக்கிறது. அது ஏன் என்ற கேள்விக்குப் பதில்தான், முன்னாள் பத்திரிகையாளரும் திரைப்பட இணை இயக்குநருமான சின்னப்பா கணேசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம். தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் மோடி எதிர்ப்பு மாய பிம்பம் என்று கூறும் நூலாசிரியர், தமிழகத்திற்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தை நூல் முழுவதிலும் விளக்கி இருக்கிறார்.

சிறிய பத்திகளுடன் கூடிய எளிய எழுத்துநடை, கோர்வையான சித்திரிப்புகள், கவனமாக அளிக்கப்பட்டுள்ள அடிப்படைத் தரவுகள், படிக்கத் தூண்டும் சரித்திர நிகழ்வுகள், இவை அனைத்தையும் லாவகமாக கட்டுரையில் இணைத்திருக்கும் பாங்கு, நல்ல அச்சுப் பதிப்பு என இந்நூலின் சிறப்புகளைப் பட்டியலிடலாம். பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார்.

பாஜகவினரே அறியாத பல புள்ளிவிவரங்களை ஒரே நூலில் 27 கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தேசிய அளவில் இரண்டாமிடம் வகிப்பது தமிழகம்; சென்ற ஆண்டு வழங்கப்பட்ட நூறு பத்ம விருதுகளில் தமிழர்கள் பெற்றவை 12; சென்ற நிதியாண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ. 8 லட்சம் கோடி; பிரதமரின் விவசாய கௌரவ நிதி பெறுவோரில் 37 லட்சம் பேர் தமிழக விவசாயிகள் – இதுபோன்ற தகவல்கள் பலர் அறியாதவை.

இந்த நூல் பாஜக உறுப்பினர்களுக்குக் கையேடாகவும், அதனை எதிர்க்கும் பிற கட்சியினருக்கு சுயபரிசோதனை செய்யப் பயன்படும் ஆய்வேடாகவும் விளங்குகிறது.

***

மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது…
சின்னப்பா கணேசன்.

368 பக்கங்கள், விலை: ரூ. 350-

வெளியீடு: சோழன் பதிப்பகம்,
எண்: 3இ, மூன்றாவது தளம்,
சாய் சூர்யா அடுக்ககம்,
காமகோடி நகர், சென்னை- 600 100
கைப்பேசி எண்கள்: 90923 45641, 97899 65475


Leave a comment