தலைநகரில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!

16 Dec

குஜராத், ஹிமாசல் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் பரபரப்பில், தில்லி மாநகராட்சித் தேர்தலில் நிகழ்ந்திருக்கும் அதிரடி மாற்றம் பலராலும் கவனிக்கப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியை நிர்வகித்து வந்த பாஜகவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

தலைநகர் தில்லியை உள்ளடக்கிய சட்டப்பேரவையில் 2015 முதல் அசுர வலிமையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தாலும் தில்லி மாநகராட்சியை வசமாக்க முடியவில்லை. அதில் பாஜக தொடர்ந்து வென்று வந்தது.

தில்லி மாநகராட்சி இதற்கு முன் வடக்கு தில்லி, தெற்கு தில்லி, கிழக்கு தில்லி என மூன்று மாநகராட்சிகளாக நிர்வகிக்கப்பட்டது. மூன்றிலுமே பாஜக பெரும்பான்மை வலுவுடன் நிர்வகித்து வந்தது. மாநில ஆட்சி தம் வசமிருந்தபோதும் மாநகராட்சிகள் பாஜக வசமிருந்ததால், ஆம் ஆத்மி கட்சியால் அடிமட்ட அளவில் தனது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான மாநில அரசுக்கும், பாஜக நிர்வகித்த மூன்று மாநகராட்சிகளுக்கும் இடையே அதிகாரப் போட்டியும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வந்தன. இதனிடையே மத்திய அரசின் புதிய சட்டத்தால் மூன்று மாநகராட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தில்லி மாநகராட்சியாக கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது.

இதற்கு முன் 2017இல் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல்களில் மொத்தமிருந்த 272 வார்டுகளில் பாஜக 181 வார்டுகளில் வென்றிருந்தது (36.1 % வாக்குகள்). ஆம் ஆத்மி கட்சி 48 வார்டுகளிலும் (26.2 % வாக்குகள்), காங்கிரஸ் 30 வார்டுகளிலும் (21.1 % வாக்குகள்) வென்றிருந்தன. வார்டுகள் மறுசீரமைப்புக்குப் பிறகு ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியின் 250 வார்டுகளுக்கு தேர்தல் கடந்த டிச. 4-இல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் டிச. 7-இல் வெளியாகின.

இத்தேர்தலில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி அறுதிப் பெரும்பான்மையை விட கூடுதலாக 8 வார்டுகளில் வென்றுள்ளது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் (42 % வாக்குகள்) வென்று மாநகர நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது. அடுத்தபடியாக பாஜக 104 இடங்களிலும் (39.1 % வாக்குகள்), காங்கிரஸ் 9 இடங்களிலும் (11.7 % வாக்குகள்) வென்றுள்ளன.

என்றபோதும், ஊடகங்கள் கணித்தது போல ஆம் ஆத்மி கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கவில்லை. இத்தேர்தலில் 20 இடங்களைக்கூட பாஜக வெல்லாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரசாரத்தில் கூறிவந்தார். 15 ஆண்டு கால தொடர்ச்சியான நிர்வாகத்தால் பாஜகவினர் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. ஆனால் அதையும் மீறி 104 இடங்களை பாஜக வென்றிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

73.36 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்த இத்தேர்தலில் பாஜகவைவிட 2.2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி வசப்படுத்தி இருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களில் சரிபாதி பெண்கள் என்பதாகும். இவர்களில் 71 பேர் ஆம்ஆத்மி கட்சியினர்.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற பிரதமர் மோடி காரணமானது போலவே, தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் காரணமாகி உள்ளார். மாநில அரசில் ஊழலற்ற நிர்வாகம், கேஜ்ரிவாலின் இலவச அறிவிப்புகள், முந்தைய மாநகராட்சி நிர்வாகம் மீதான அதிருப்தி ஆகியவை இந்த வெற்றிக்குக் காரணம் என்றாலும், இவை அனைத்தையும் விட முக்கியமான காரணம் பாஜகவின் பிரதான எதிரியாக தன்னை ஆம் ஆத்மி கட்சி முன்னிறுத்திக் கொண்டதுதான்.

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தொடர்ந்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவுக்குப் போட்டியாக மிதவாத ஹிந்துத்துவப் போக்கையும் ஒருசேரக் கடைப்பிடித்தார். ரூபாய் நோட்டில் லட்சுமி படம் அச்சிட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவர் பாஜகவுக்கு கடும் சவாலைக் கொடுத்தார். தீவிர ஹிந்துத்துவக் கட்சியான பாஜகவே இதனைச் சமாளிக்க இயலாமல் தடுமாறியது. பிரதமர் மோடியை எதிர்க்கும் பிற அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணையாமல், தனித்து பாஜகவை எதிர்த்துப் போராடினார் கேஜ்ரிவால். இதன் மூலமாக, பாஜகவை எதிர்க்கக் கூடிய திறனுள்ள ஒரே கட்சி என்ற பிம்பத்தை அவர் உருவாக்கினார்.

இதனை நம்பி, இதுவரையிலும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்த சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். இதுவே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியாகவும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியாகவும் மாற்றம் பெற்றுள்ளது. தில்லி மாநகராட்சியில் சுமார் 60 வார்டுகளில் வெற்றியைத் தீர்மானிப்பவையாக சிறுபான்மையினரின் வாக்குகள் உள்ளன. பாஜக எதிர்ப்பு என்ற தனது நிலைப்பாட்டால் அந்த இடங்களில் ஆம் ஆத்மி கட்சி எளிதாக வெல்ல முடிந்திருக்கிறது.

தவிர, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மாநகர நிர்வாகம் தொடர்பான பத்து அம்சங்கள், வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தின. தூய்மையான அழகிய தில்லியை உருவாக்குவோம்; வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்போம்; மாநகராட்சி பள்ளிகள், மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவோம்; மோசமான சாலைகளைச் சீரமைப்போம்; மாநகராட்சி ஊழியர்களுக்கு குறித்த தேதியில் ஊதியம் வழங்குவோம்; வாகனநிறுத்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம் – ஆகியவை அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானவை.

எதிர்த்தரப்பிலோ இதுவரை 15 ஆண்டுகள் மாநகராட்சியை நிர்வகித்ததால் ஏற்பட்ட ஊழல் புகார்கள், அதிருப்திச் சுமைகளுடன் பாஜக தடுமாறியது. காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு முன்னதாகவே மூன்றாமிடத்துக்கு நகர்ந்துவிட்டது. இத்தகைய நிலையில் தில்லி மாநகராட்சித் தேர்தலை மிகவும் லாகவமாக தனக்கு சாதகமானதாக கேஜ்ரிவால் மாற்றிவிட்டார். அதன் விளைவே இந்தச் சிறப்பான வெற்றி.

தலைநகர் தில்லியில் பாஜகவுக்கு வலுவான அடித்தளம் உண்டு. காங்கிரஸ் மத்தியில் கோலோச்சிய காலத்திலேயே தில்லியில் பாஜக வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றதுண்டு. லால் கிருஷ்ண அத்வானியை பெரும் தலைவராக்கியது தில்லி மாநகரம் தான். கே.ஆர்.மல்கானி, மதன்லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, விஜய்குமார் மல்ஹோத்ரா, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி போன்ற தலைவர்களை பாஜகவுக்கு அளித்த மாநிலமும் தில்லிதான்.

தேசப்பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஹிந்து அகதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக பாஜகவுக்கு முந்தைய பாரதிய ஜனசங்கம் இருந்தது. தலைநகரில் பெருமளவில் வசிக்கும் சீக்கியர்களும் அகாலிதளத்தின் நட்புக்கட்சியான பாஜகவை ஆதரித்து வந்தனர். ஆனால், உட்கட்சிப்பூசல்கள், ஊழல் புகார்களால் தனது பெருமையை பாஜக சிறுகச் சிறுக இழந்தது. அந்த இடத்தையே ஆம் ஆத்மி கட்சி 2013 இல் கைப்பற்றியது.

தற்போதைய தில்லி பாஜகவில் விஜேந்தர் குப்தா, ஹர்ஷ்வர்தன், கெüதம் காம்பீர், ஸ்மிருதி இரானி போன்ற தலைவர்கள் இருந்தாலும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நிகராக அவர்களால் மக்களை வசீகரிக்க முடியவில்லை. இந்த உள்ளூர்த் தலைமை வெற்றிடத்தை நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கால் நிரப்ப இயலவில்லை. அதனால்தான் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்தாலும், சட்டப் பேரவையிலும் மாநகராட்சியிலும் ஆம் ஆத்மி கட்சியை தில்லி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இத்தேர்தலில் குறைந்தபட்சம் 24 வார்டுகளில் ஆயிரம் வாக்குகளுக்கு உட்பட்ட வித்யாசத்தில் பாஜக தோல்வியுற்றிருக்கிறது. அதுபோலவே ஆம் ஆத்மி கட்சியும் 24 வார்டுகளில் ஆயிரம் வாக்குகளுக்கு உட்பட்ட வித்யாசத்தில் தோற்றிருக்கிறது. அதாவது மிகவும் பலத்த போட்டிக்கு இடையேதான் மாநராட்சி நிர்வாகம் கைமாறி இருக்கிறது. எனவே புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் அப்போது மத்தியில் அசுர பலத்துடன் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உதயமாகி வளர்ந்த கட்சி தான் பாரதிய ஜனசங்கம். அதன் தற்போதைய வடிவமான பாஜக இன்று மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் மிகுந்த செல்வாக்குடன் ஆட்சியில் இருக்கிறது. அதேபோல இன்றைய பாஜகவின் வெற்றிப் பயணத்துக்கு தடைக்கல்லாகவும், நிகரான போட்டியாளராகவும் உருவாகி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. மக்களாட்சியில் இதுவும் ஒரு வளர்ச்சிநிலையே என்பதை அறிந்தோருக்கு தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் உற்சாகம் அளிக்கும்.

நரேந்திர மோடி என்ற தனிநபரின் செல்வாக்கை நம்பி இருக்கும் பாஜகவுக்கும், சரியான தலைமையின்றித் தள்ளாடும் காங்கிரஸ் கட்சிக்கும் எச்சரிக்கை விடுப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி அமைந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.

  • தினமணி (7ஆம் பக்கம்- சிறப்புக் கட்டுரை) –14.12.2022

.

Leave a comment