நாடாளுமன்ற நடவடிக்கைகளின் நலிவு

22 Dec

 -மனீஷ் திவாரி

………….. கடந்த டிசம்பர் 7-இல் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையோ, நாடாளுமன்றமோ,  அவை நடவடிக்கைகளில் திறமையுடன் செயல்படுவது அவற்றின் உறுப்பினர்கள் நிறைவேற்ற வேண்டிய புனிதக் கடமையாகும்.  தவிர்க்க இயலாத காரணமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது கூடாது.

                துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற விதிமுறைகளின் பயன்பாடே,  நாடாளுமன்றத்தின் செயல்திறனை தொடர்ந்து மதிப்பிழக்கச் செய்து வருகிறது.  குறிப்பாக, அரசியல் சாசனத்தின் பத்தாவது அட்டவணை விதிகள் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ற அளவில் பேச்சு வழக்கில் மாறிவிட்டது. 

                அரசாங்கத்தைப் பொறுப்புள்ளதாக்கும் முக்கியமான கருவியே நாடாளுமன்ற கேள்வி நேரம் ஆகும். நாட்டின் அடிப்படைப் பிரச்னைகள், இன்றியமையாத தேசிய முக்கித்துவம் வாய்ந்த  விவகாரங்கள் குறித்து அரசைக் கேள்வி கேட்பது உறுப்பினரின் கடமை. அவற்றுக்குத் தகுந்த பதில் அளிப்பது அரசின் பொறுப்பு. ஆனால், நாடாளுமன்றச் செயலகத்தில் பல்வேறு காரணங்களால் உறுப்பினர்களின் கேள்விகள் வடிகட்டப்படுகின்றன. இந்தப் போக்கு கேள்வி நேரத்தை தொடர்ந்து சரிவை நோக்கி இட்டுச் செல்கிறது.

                நாடாளுமன்ற கேள்வி நேரத்துக்கென மூன்று நூற்றாண்டுப் பழமை வாய்ந்த பாரம்பரியம் உண்டு. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முதல் கேள்வி நேரம் இங்கிலாந்தில் தொடங்கியது. 1721, பிப்ரவரி 9-இல் அந்நாட்டின் பிரபுக்கள் அவையில் கெüபேர் பிரபு கேட்ட கேள்வியே, முதல் கேள்வி என்ற பெருமை பெற்றது. குறிப்பிட்ட  ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி சரியா என்று அரசை அவர் கேட்டார். அதற்கு அரசு அளித்த பதில், கைதினைஉறுதிப்படுத்தியது. அதுவே நாடாளுமன்ற அவையில் கேள்வி நேரம் என்ற புதிய பகுதி தொடங்குவதற்கு அச்சாரமிட்டது.

                கேள்விகள் ஏன் முக்கியமானவை? ஏனெனில் அரசின் பொறுப்புணர்வை நிலைநிறுத்த, அரசிடமிருந்து தகுந்த பதிலை வரவழைப்பதே உறுப்பினரின் கேள்விக்கு இலக்கு. அரசின் கொள்கைகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவிப்புகள் ஆகியவை செயல்வடிவம் பெறுகின்றனவா என்பதைக் கண்டறிய கேள்வி நேரம் அவசியம்.

                அது மட்டுமல்ல, சட்டப்பேரவையோ, நாடாளுமன்றமோ, அவற்றின் உறுப்பினர்கள், தங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் முக்கியமான பிரச்னைகளை முன்வைப்பதற்கான எளிய வாய்ப்பும் கேள்வி நேரமே.

                கேள்வி நேரத்துக்கான கண்டிப்பான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறையிலுள்ளன. உதாரணமாக, அவையில் எழுப்பப்படும் எந்தக் கேள்வியும் அதிகபட்சம் 150 வார்த்தைகளுக்கு மிகக் கூடாது. நாடாளுமன்றக் கூட்டத்தில் தான் பதில் பெற விரும்பும் கேள்வியை 15 நாட்களுக்கு முன்னதாகவே உறுப்பினர் சமர்ப்பிக்க வேண்டும். இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் துறைவாரியாக தனித்தனி நாட்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

                உறுப்பினர்கள் இரு வகையான கேள்விகளைக் கேட்கலாம். அமைச்சரின் வாய்மொழியிலான பதிலையோ, எழுத்துவடிவிலான பதிலையோ உறுப்பினர் கோரலாம். இந்த இரு வகை கேள்விகளுக்கும் இரு பிரத்யேகப் பயன்பாடுகள் உள்ளன.

                வாய்மொழி பதிலை உறுப்பினர் கோருகையில் அவையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் நேரில் வந்து தனது பதிலை அளிக்க வேண்டும். அப்போது அது தொடர்பான கூடுதல் துணைக் கேள்விகளை அவைத்தலைவரின் அனுமதியுடன் உறுப்பினர் எழுப்பலாம். அவற்றுக்கும் அமைச்சர் விளக்கம் அளித்தாக வேண்டும். எழுத்து வடிவ பதிலைப் பொறுத்த வரை, அமைச்சர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை; பதிலை அவையில் சமர்ப்பித்தால் போதுமானது.

                கடந்த பல ஆண்டுகளாக, நாடாளுமன்ற கேள்வி நேரமும், அவைகளின் செயல்பாடுகளும் அவற்றின் திறனிலும் தரத்திலும் சரிவைக் கண்டு வருகின்றன.

                முதலாவதாக, உறுப்பினர்களின் பெரும்பாலான கேள்விகள், நாடாளுமன்ற விதிமுறைகளை மனம்போன போக்கில் திரிக்கும் வழக்கத்தால் தடுக்கப்பட்டு விடுகின்றன. 2020 செப்டம்பர் 16-க்கும் 2022 ஏப்ரல் 8-க்கும் இடைப்பட்ட காலத்தில் நான் மக்களவையில் எழுப்ப முன்வைத்த 36 கேள்விகள் நிராகரிக்கப்பட்டன. மக்களவை நடைமுறை விதிகளில் 41(2)(21) விதியை தன்னிச்சையாகப் பயன்படுத்தி, மக்களவைச் செயலகத்தால் அவை தடுக்கப்பட்டன. 2019 ஜூன் முதல் 2020 செப்டம்பர் வரையிலான காலத்திலும் இதேபோன்ற விதிகளால் எனது பல கேள்விகள் நிராகரிக்கப்பட்டன.

                அமைச்சரவைக் குழுக்கள், அமைச்சரவை விவாதங்கள், குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்படும் பரிந்துரைகள் போன்ற ரகசியமான தகவல்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவதை நாடாளுமன்ற விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. ஆனால் இத்தகைய அம்சங்கள் இல்லாத கேள்விகளும் கூட  பல சமயங்களில் இதே விதிமுறைகளைக் கொண்டு ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டு விடுகின்றன.

                தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் என்பதற்காக, அனைத்துக் கேள்விகளையும் தடுக்க முடியாது. உறுப்பினரின் கேள்விகள் பதற்றத்தை உருவாக்குபவை என   நாடாளுமன்றச் செயலகத்துக்குத் தோன்றினால், அவற்றை, அனைத்துக் கட்சி  உறுப்பினர்களைக் கொண்ட கேள்விக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். அங்கு அந்தக் கேள்விகள் நிராகரிக்கப்பட்டது நியாயமானதுதானா என்பது ஆராயப்பட்டு, தீர்வு காண வேண்டும்.

                  நாடாளுமன்ற விதிமுறைகளை தவறாகப் பயன்படுத்தும் மோசமான போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அரசைக் கண்காணித்து வழிநடத்துவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைக் கடமையைத் தடுப்பதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, இறையாண்மை மிக்க  உறுப்பினர்களின் அவையே அரசை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும்போது, தனது அவை உறுப்பினர்களையே அரசு நம்பாத நிலையில், அவர்களது கேள்விகளுக்குப் போதிய வாய்ப்பளிக்காத நிலையில், ஜனநாயகம் எவ்வாறு சிறப்பாக நிலைபெற முடியும்? இது ஒரு வெளிப்படையான கேள்வியாக நம் முன்பு உள்ளது.

                 இரண்டாவதாக, கேள்வி நேரத்தைப் பொருத்த வரையில், நடைமுறைச் சிக்கல் தொடர்பான கட்டமைப்புப் பிரச்னைகளும் உள்ளன. மக்களவையில் உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் நூறு கேள்விகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கேள்விகளுக்கு மட்டுமே ஒரு நாளில் பதில் அளிக்க முடியும். மக்களவையில் 543 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்களது கேள்விகளைத் தேர்வு செய்ய குலுக்கல் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பகடையாடுவது போன்ற இந்த அதிர்ஷ்டச் சீட்டு குலுக்கல் முறை, மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான வாய்ப்பை அளிக்கின்றதா?

                மேற்கண்ட காரணத்தால், நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினராக இருக்கும் பலராலும், தங்கள் பதவிக்காலமான ஐந்தாண்டுக் காலத்தில் அவையில் ஒரே ஒரு வாய்மொழிக் கேள்வியைக் கூட எழுப்ப முடிவதில்லை. உதாரணமாக, கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் வாய்மொழிக் கேள்விகள் 14 % -க்கு  மட்டுமே அவையில் பதிலளிக்கப்பட்டன. அவற்றிற்கு அளிக்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு. அதிலும் 5-6 கேள்விகளுக்குத் தான் முழுமையான பதில் பெற முடிந்தது.

                அவையில் உறுப்பினரின் கேள்வி விவாதத்துக்கு வர வேண்டுமானால், குலுக்கல் முறையில் அவரது கேள்வி தேர்வாகி முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தாக வேண்டும். இதை வேறு வகையில் சொல்வதென்றால், நாடாளுமன்ற மக்களவையைப் பொறுத்த வரை,  கேள்வி நேரத்தில் அரசைக் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் 0.9 % மட்டுமே உள்ளது.

                எழுத்துவடிவ பதிலைப் பெறுவதற்கான கேள்விகளுக்கும் குலுக்கல் நடைமுறை உண்டு. கூட்டத்தொடரின் ஒரு நாளில் எழுத்து வடிவில் பதிலளிக்க 230 கேள்விகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதாவது வாய்மொழி வாயிலாகவும் எழுத்து வடிவிலும் பதிலைப் பெறும் வாய்ப்பு பெரும்பாலான உறுப்பினர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

                உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்களிலும் தரம் குறைந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக தெளிவான விளக்கத்தை அரசிடம் எதிர்பார்த்துக் கேள்வி எழுப்புவது எழுத்துவடிவக் கேள்வியாகும். அதில், தொடர்புடைய விஷயத்தில் துணைக் கேள்விகளும் கேட்கப்படலாம். இவை அனைத்திற்கும் ஓரிரு வரிகளிலேயே பதில் அளிப்பது வழக்கமாகி வருகிறது.

                உதாரணமாக, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தொடர்பான கேள்வி 2021 ஜூலை 29-இல் எழுப்பப்பட்டது. பங்கா –  ஸ்ரீ அனந்தபூர்சாஹிப் இடையிலான நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்படுவது தொடர்பான அந்தக் கேள்வியில் ஐந்து துணைக் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் திருப்தி அளிக்கும் வகையில் அமைச்சகத்தால் விளக்கம் அளிக்கப்படவில்லை; ஒற்றைவரியில் பதில் அளிக்கப்பட்டது.

                மாறாக, 2005ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்படும் கேள்விகளுக்கு முழுமையான தகவல்கள் அளிக்கப்படுகின்றன. தேசத்தின் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியால் எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கிடைக்காத பதில்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் கிடைப்பது ஒரு நகைமுரணாக இருக்கிறது.

                இது ஒருவகையில் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு ஆற்றலை மழுங்கடிப்பதாகும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அதிகாரிகள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் புனித மையங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லாது போகும்போது, நாடாளுமன்ற ஜனநாயகம் பொருளிழந்து போகும்.

                இத்தகைய நிலை தொடர்வது, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துவிடும். எனவே நாடாளுமன்ற கேள்வி நேரம் தொடர்பாக வலிமையான சீர்திருத்தங்கள் செய்யப்படுவது காலத்தின் கட்டாயமாகும். வாய்மொழிக் கேள்விகளுக்கு கூடுதல் நேரமும் வாய்ப்பும் அளிப்பது நாடாளுமன்றச் செயல்பாட்டை மேம்படுத்தும்.

                புகழ்பெற்ற நாடாளுமன்றவாதியான ஜான் ஸ்டூவர்ட் மில் மக்கள் பிரதிநிதித்துவ அரசு குறித்துக் கூறுகையில்  “பிரதிநிதித்துவ அவையின் மைய அலுவல் நோக்கம் அரசைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதே” என்பார். அதுவே இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

  • கட்டுரையாளர்: காங்கிரஸ் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர்.
  • தினமணி (21.12.2022)

Leave a comment