கிள்ளைமொழி

31 Dec

தேனிசை வழியும் அந்த

ஆண்குரலும் பெண்குரலும்

அனைவராலும் விரும்பப்படுகின்றன…

.

சோகச் சூழலையும்

இனிமையாக்கும்

ஜாலவித்தை அறிந்தவை

அக்குரல்கள்.

.

கூண்டுக் கம்பிகளைப் பிறாண்டி

வானை நோக்கிக் கூச்சலிடும்

இணைப் பறவைகளின் பேசுமொழி

செவியை வருடுகையில்

துயரம் மறந்துபோகும்.

.

பரந்த வானை நோக்கிக் கதறும்

பறவைகளின் எச்சங்கள்

கம்பிக் கூண்டில் அவ்வப்போது

சுத்தம் செய்யப்படுகின்றன.

.

கிள்ளைமொழிப் பறவைகளுக்கு

மறவாமல் தண்ணீரும் வைக்கும்

கருணை மிகுந்தவர்கள்

மனிதர்கள்!

.

மரக்கிளையில் பற்றி நின்று

இணைப்பறவைகளின்

தீவனக் கிண்ணத்தை

ஓரக்கண்ணால் பார்க்கிறது

அண்டங்காக்கை.

.

கூண்டுக்குள்

நித்தமும் நடக்கிறது

இசைக் கச்சேரி.

.

கீ கீ கீ கீ கீ கீ …….

.

.

Leave a comment